ராஜபக்‌ஷ குடும்பத்துக்குச் சொந்தமான $ 18 பில். குற்றச்சாட்டு குறித்து

By November 18, 2016News

நானும் எனது மனைவியும் மகன்களும் சகோதரர்களும், 18 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்துக்களைச் சேர்த்து, வெளிநாட்டு வங்கிக் கணக்குகளிலும் வெளிநாடுகளிலுள்ள வேறு நபர்களின் பெயர்களில் இயங்கும் நிறுவனங்களிலும் மறைத்து வைத்திருப்பதாக வெளிநாட்டு புலனாய்வு முகவராண்மைகளிடமிருந்து தகவல்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாக,நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றில் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார். பெரிய வீடொன்று கொழும்பிலோ அல்லது ஹொட்டலொன்று எங்கோ நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது, அது எனது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமாக அமைந்திருக்க வேண்டுமென்ற குற்றச்சாட்டுக்களுடைய காலமொன்று காணப்பட்டது. அவ்வாறான பிரசாரம் இப்போது மேற்கொள்ளப்பட முடியாது, ஆகவே தற்போது வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பணம் தொடர்பாக எனது அரசியல் எதிரணிகள் கதைக்க ஆரம்பித்துள்ளனர்.

எனது குடும்பம் வெளிநாடுகளில் வைத்துள்ள 18 பில்லியன் அமெரிக்க டொலர் சம்பந்தமான கருத்தினை வெளியிடும் போது, அவர்களுக்குக் கிடைத்துள்ள தகவல் சரியானதா இல்லை எனத் தெரியவில்லை எனத் தெரிவித்து அவர் முற்பாதுகாப்பை மேற்கொண்டார். தன்னைப் பாதுகாத்துக் கொண்டு, கட்டுக்கதையொன்றை உண்மையான தகவலாக அவர் வெளியிட்டிருந்தார். வெளிநாட்டு அமைச்சர் அவ்வாறான கருத்துக்களை வெளியிடும் போது, அவை வெளிநாட்டு ஊடகங்களாலும் கூட வெளியிடப்படுகின்றன. எனக்கும் எனது குடும்ப அங்கத்தவர்களுக்கெதிராகவும் பரப்பப்படும் பொய்யான பிரசாரங்களின் மறைவான வழிகள் இவையாகும். நானோ, எனது மனைவியோ, மகன்களோ அல்லது சகோதரர்களோ வெளிநாடுகளில் எந்தவித இரகசிய வங்கிக் கணக்குகளையோ அல்லது மறைக்கப்பட்ட உரிமையாளர்களைக் கொண்ட நிறுவனங்களில் சட்டரீதியற்ற முதலீடுகளையோ கொண்டிருக்கவில்லை என்பதை மீண்டும் பொதுமக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். அமைச்சர் சமரவீரவினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துத் தொடர்பாக, சட்ட ஆலோசனை பெற்றுக் கொள்ளப்படும்.